Saturday, October 20, 2012

தென்மராட்சியின் தொன்மையும் பெருமையும்


தென்மராட்சியின் வரலாற்றைத் தனித்துப் பார்ப்பதற்கு அப்பிரதேச மக்களிடையே காணப்படும் இறுக்கமான சமயப்பற்று ஒரு முக்கிய காரணமாகும். யாழ்ப்பாண வரலாற்றில் இஸ்லாம், கிறிஸ்தவம், ஆங்கிலக் கல்வி, ஐரோப்பிய கலாசாரம் எனப் பல்லினப் பண்பாடு முதலில் தோன்றி வளர்ந்த இடங்களில் ஒன்றாகத் தென்மராட்சியும் கூறப்படுகிறது.
 அப் பிரதேசத்தின் நீண்ட கால வரலாற்றுப் பின்னணியும், கால முன்னேற்றத்திற்கு ஏற்ப புதிய மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் பண்பும், வட இலங்கையில் பிற நாட்டுப் பண்பாடுகளை முதலில் உள்வாங்கி கொள்ளும் மையத்தில் இப்பிராந்தியம் அமைந்திருப்பதும் அதற்கு முக்கிய காரணங்களாகும்.

இருப்பினும் இப்பிராந்தியத்தின் தொன்மையும், பண்பாட்டுத் தனித்துவமும் இந்து மதத்தால் பண்டு தொட்டு தோன்றி, வளர்ந்தது என்பதில் ஐயமில்லை. தமிழர் வரலாற்றில் மதம் பற்றிய ஆய்வானது இனம், வரலாறு, பண்பாடு, பிரதேசம் பற்றிய ஆய்வாகவே பார்க்கப்படுகிறது. ஏனெனில் இந்து மதத்தை மையப்படுத்திய ஆலயங்களைச் சுற்றியே பண்டைய காலத்தில் பண்பாட்டின் அனைத்துப் பரிமாணங்களும் தோற்றம் பெற்றன. தமிழகத்தில் ஐரோப்பியர் ஆட்சிக்கு முன்னர் பல பேரரசுகள் தோன்றிய போதும் அரச மையம் என ஒன்று அக்காலத்தில் இருக்கவில்லை. மாறாக ஆலயங்களே அரசர்களின் இருப்பிடங்களாகவும், பாதுகாப்பு அரண்களாகவும், நிர்வாக மையங்களாகவும், மக்களின் கல்விக் கூடங்களாகவும், பொருளாதார மையங்களாகவும் செயற்பட்டன. இந்த அம்சங்களே யாழ்ப்பாண அரசு கால ஆலயங்களிலும் காணப்பட்டன. ஆகவே தென்மராட்சியில் இதுவரை அடையாளம் காணப்பட்ட புராதன ஆலயங்களை சமயத்தின் அடையாளங்களாக மாத்திரம் பார்க்காமல், அவற்றை அக்கால வரலாற்று, பண்பாட்டு அடையாளங்களாகவும் பார்க்க வேண்டும்.

இயற்றாலைக் கோட்டையில் இருந்த ஆலயம்
ஆகம மரபு சார்ந்த ஆலயங்கள் இலங்கையிலும், தமிழகத்திலும் கி.பி. 6 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னரே தோற்றம் பெற்றன. இதற்கு முற்பட்ட கால ஆலயங்கள் கிராமிய ஆலயங்கள் அல்லது ஆகம மரபு சாராத ஆலயங்கள் என அழைக்கப்பட்டன. தென்மராட்சியில் இம்மரபு சார்ந்த ஆலயங்கள் பல தற்காலத்தில் காணப்பட்டாலும், இயற்றாலைக் கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள ஆலயம் மிகத் தொன்மையானது என்பதற்கு நம்பகரமான சான்றுகள் காணப்படுகின்றன. தற்போது அவ்விடத்தில் புதிய ஆலயம் கட்டப்பட்டுள்ளது. 1995 க்கு முன்னர் அவ்விடத்தில் ஒரு ஆலயம் காணப்பட்டது. சிறிய காடுகளுக்கு மத்தியில் வட்டமாக அமைக்கப்பட்ட நிலப் பரப்பில் ஏழு தெய்வங்கள் வைக்கப்பட்ட நிலையில் ஏழு கன்னிமார் ஆலயமாக இது வழிபடப்பட்டது. அத்தெய்வங்கள் இயற்கையான கற்களைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்டு இருந்தாலும், இரு தெய்வங்களின் உருவங்கள் இயற்கையான கற்களில் மனித உருவில் வடிவமைக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டன. இந்த ஆலயம் இருந்த இடத்தில் புராதன குடியிருப்புக்களுக்கு உரிய சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதுடன், தெய்வ உருவங்கள் வைக்கப்பட்ட செங்கட்டியால் அமைக்கப்பட்ட மேடையில் உள்ள சில செங்கற்களில் இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பிராமி  எழுத்துக்கள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் சங்க காலத்திற்குச் சமமான காலத்தில் தென்மராட்சியிலும் கிராமிய வழிபாட்டு மரபு இருந்துள்ளது என்பது தெரிய வருகிறது.

வேலம்பிராய் விநாயகர் ஆலயம்
தென்மராட்சியில் மறவன்புலவு மற்றும் தனங்கிளப்பு ஆகிய இடங்களுக்கு இடைப்பட்ட கடற்கரை சார்ந்த ஊரில் வேலம்பிராய் என்ற சிறிய குறிச்சி காணப்படுகிறது. தற்போது மக்கள் நடமாட்டம் அற்ற அப்பகுதி சிறிய பற்றைக் காடுகளாகக் காணப்படுகிறது. ஆனாலும் முன்னொரு காலத்தில் அங்கு செறிவான மக்கள் குடியிருப்புக்கள் இருந்தமைக்கான ஆதாரங்கள் பரந்து காணப்படுகின்றன. அண்மைக் காலங்களில் அப்பிரதேசத்தில் கள ஆய்வில் ஈடுபட்ட எமது துறைசார்ந்த விரிவுரையாளர் செல்வி. சசிதா குமாரதேவன், பிற்காலத்தில் கட்டப்பட்ட சிறிய ஆலயத்திற்குப் பின்புறமாக மிகப் பெரிய ஆலயத்தின் அழிபாடுகளைக் கண்டுபிடித்தார். பின்னர் அவ்விடத்தில் நாம் கள ஆய்வை மேற்கொண்டபோது, அவ்வாலயம் தொடர்பான பல ஆதாரங்களைச் சேகரிக்க முடிந்தது. வேலம்பிராய் விநாயகர் ஆலயம் தொடர்பான காணிப் பதிவேட்டில் அவ்விடத்தில் இருந்த ஆலயம் ஒன்று 19 ஆம் நூற்றாண்டில் மீளவும் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த ஆலயம் தற்போது வழிபாட்டில் உள்ள ஆலயமா? அல்லது இடிந்த நிலையில் காணப்படும் ஆலயமா? என்பது தெரியவில்லை. ஆயினும் இடிவடைந்த நிலையில் காணப்படும் ஆலயக் கற்கள் மிகப் பழைமையான ஆலயத்திற்கு உரியவை என்பதை அக்கற்களின் வடிவமைப்பு, அளவுகள், வட்டம் மற்றும் சதுர வடிவக் கற்களில் செதுக்கப்பட்ட அலங்காரங்கள் ஆகியவை உறுதி செய்கின்றன.
 மேலும் அவ்வாலயத்தில் காணக்கூடிய இன்னொரு ஆலயத்தின் கர்ப்பக்கிருக அழிபாடுகளுக்கு வடக்கில் அமைந்த முன் மண்டபம் வட்டமான உயர்ந்த தூண்களைக் கொண்டிருப்பதுடன், அதன் வடக்குப் புறத்தில் அமைந்த சுவர்கள் யன்னல்களைக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. பொதுவாக யாழ்ப்பாண அரசு காலத்தில் கட்டப்பட்ட ஆலயங்கள் ஒல்லாந்தரின் பிற்கால ஆட்சியில் மீளவும் கட்டப்பட்டபோது, அவற்றில் ஒல்லாந்தர் காலக் கலை மரபையும் கட்டடக் கலையில் இணைத்துக் கொண்டமைக்கு ஆதாரங்கள் உண்டு. அதை வேலம்பிராய் விநாயகர் ஆலயச் சிதைவுகளும் உறுதி செய்கின்றன.

மட்டுவில் கல்வத்தைச் சிவன் கோவில்
தென்மராட்சியில் நீண்ட காலமாகப் புகழ்ந்து பேசப்படும் ஆலயங்களில் மட்டுவில் கல்வத்தைச் சிவன் கோவிலும் ஒன்றாகும். இவ்வாலயம் தொண்டமானாறு கடல்நீரேரி சார்ந்த இடத்தில் அமைந்துள்ளது. அதன் எதிரே சங்கிலியன் வாழ்ந்த கோப்பாய் கோட்டையும் காணப்படுகிறது. அங்கிருந்தே போர்த்துக்கேயப் படையெடுப்பின்போது சங்கிலியன் மட்டுவிலை அடைந்து, பின்னர் மந்துவில் சென்றான் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாலயத்தின் கட்டட, சிற்பக் கலை மரபு தமிழகக் கலை மரபை, அதிலும் குறிப்பாக பல்லவ, சோழர் காலக் கலை மரபை ஒத்திருப்பதால் இவ்வாலயத்தை வரலாற்றுப் பழைமை வாய்ந்த ஆலயமாகக் கருத இடமுண்டு. அத்துடன் இவ்வாலயத்திற்கு மேற்கே காட்டுப் பகுதியில் காணப்படும் பிராமணர் வாழ்ந்த இருப்பிடத்தின் அழிபாடுகள், அவ்வாலயத்தின் பழைமையை பறைசாற்றுகின்றன. மட்டுவில் கிராமத்துக்கும், சோழர் காலத்திற்கும், யாழ்ப்பாண அரசு காலத்திற்கும் உள்ள தொடர்புகளை நோக்கும்போது, இவ்வாலயம் பழைமை வாய்ந்த ஆலயம் எனக் கருத இடமுள்ளது.

சாவகச்சேரியில் யாழ்ப்பாண இராசதானி ஆலய அழிபாடுகள்?
தற்போது சாவகச்சேரியில் வாரிவனேஸ்வரர் என அழைக்கப்படும் ஆலயம் பழைய ஆலயத்தை நினைவுபடுத்தும் வகையில் பிற்காலத்தில் கட்டப்பட்டதாகும். ஆயினும் அதில் வழிபடப்படும் விக்கிரகங்கள் சில பழைய ஆலயத்தைச் சேர்ந்தது என்பதில் ஐயமில்லை. இது தொடர்பாக அண்மையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.  சாவகச்சேரி நீதி மன்றம், பஸ்தரிப்பு நிலையம், சந்தைப் பகுதி ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் எதிர்பாராமல் பல விக்கிரகங்கள் கிடைத்தன. அவை அவ்வாலயத்தில் வைத்து வழிபடப்பட்டதாகவும், கடந்த காலத்தில் ஏற்பட்ட அனர்த்தங்களில் அவற்றில் உடைவுகள் ஏற்பட்டதால் அவை ஆலயத் திருக்குளத்தில் போடப்பட்டதாகவும் தெரிய வந்தது. அதன் அடிப்படையில் திருக்குளத்தில் அச்சிலைகளைத் தேடிய போது 12 சிற்பங்கள் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
அவ்விக்கிரகங்கள் அனைத்தும் பழைமையானவை எனக் கூறமுடியாது. ஆனால் அவற்றில் சில விக்கிரகங்களின் கலை மரபு தனித்துவம் வாய்ந்ததாகவும், பழைமை வாய்ந்ததாகவும் காணப்பட்டன. பொதுவாக அவ்விக்கிரகங்கள் ஒரு முருகன் ஆலயத்திற்கு உரியதாகவே காணப்பட்டன. அச்சிற்பங்களின் காலம், கலை மரபு தொடர்பாக மதிப்பிடும் பொருட்டு அவற்றின் புகைப்படங்களை தமிழத்திலுள்ள தலைசிறந்த கலை வரலாற்று ஆசிரியர்களுக்கு அனுப்பினோம். அவ்விக்கிரகங்களின் காலம் கி.பி. 14  15 ஆம் நூற்றாண்டு எனவும், அவை யாழ்ப்பாணத்திற்கே உரிய தனித்துவமான கலை மரபு எனவும் அவர்கள் ஏகோபித்த நிலையில் கூறினர். அவர்களின் கருத்தையும் காரணங்களையும் நோக்கும்போது, இச்சிற்பங்கள் யாழ்ப்பாண அரசு கால ஆலயத்தோடு தொடர்புடையதாக இருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது. அவ்வாறாயின் பழைமையான வாரிவனேஸ்வரர் ஆலயம் இருந்த இடத்திற்கு அருகில், ஒரு முருகன் ஆலயமும் இருந்திருக்க வேண்டும் எனக் கூற இடமுண்டு. அதை எதிர்கால ஆய்வுகள் மேலும் உறுதிப்படுத்தலாம்.

சாவகச்சேரியில் வாரிவனேஸ்வரர் ஆலய அழிபாடுகள்
சாவகச்சேரியின் புனித வரலாற்றுச் சின்னங்கள் கவனிப்பாரற்ற நிலையில் சீரழிந்து போவதை பல தடவைகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கு சுட்டிக் காட்டிய சுப்பிரமணிய சர்மா அவர்கள் அண்மையில் அங்கு அத்திவாரம் வெட்டும்போது கண்டெடுக்கப்பட்ட விக்கிரகம் ஒன்றைப் பார்வையிடுமாறு இந்து நாகரிகத்துறை விரிவுரையாளர் கணேசலிங்கம் மூலம் வேண்டினார். அவ் விக்கிரகத்தை பார்வையிடச் சென்றபோது, அவ்விக்கிரகம் கண்டெடுக்கப்பட்ட சுற்றாடலில் இருந்து கிடைக்கப்பெற்ற மேலும் மூன்று விக்கிரகங்களை ஆராயச் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்நான்கு விக்கிரகங்களும் பிற தேவைகளுக்காக நிலம் வெட்டப்பட்டபோது எதிர்பாராமல் கிடைத்தவை ஆகும். முதலில் நிலத்தை வெட்டியவர்கள் இவ்விக்கிரகங்களைக் கண்டபோது வெறும் கற்கள் எனக் கருதி சாதாரண அகழ்வு மூலம் வெளியே எடுத்ததால், அவ்விக்கிரகங்களில் பல உடைவுகளும், வெடிப்புக்களும் காணப்படுகின்றன. தற்போது இந்நான்கு விக்கிரகங்களும் பிற்காலத்தில் கட்டப்பட்ட வாரிவனேஸ்வரர் ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், அவ்விக்கிரகங்களில் உள்ள உடைவு காரணமாக அவை கர்ப்பக்கிரகத்தில் வைத்து வழிபடப்படாமல் ஆலய முன் மண்டபத்திலும் அவற்றிற்கென புதிதாகக் கட்டப்பட்ட சிறிய மண்டபங்களிலும் வைக்கப்பட்டுள்ளன. அவ்விக்கிரகங்களில் சிலவற்றை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை நூதனசாலையில் வைப்பதற்கு தற்போதைய ஆலய நிர்வாக சபை முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நான்கு விக்கிரகங்களில் ஒன்று மனோன்மணி அம்மனுக்கு உரியதாகும். இவ்விக்கிரகம் சாவகச்சேரி சந்தைக்கு தெற்கே பிரதான வீதிக்கு கிழக்காக உள்ள இராசமாளிகை என்ற வளவில் மலசலகூடம் அமைப்பதற்காக நிலத்தை வெட்டிய போது 6 அடி ஆழத்தில் கண்டெடுக்கப்பட்டதாகும். கருங்கல்லில் நிற்கின்ற சமபங்க நிலையில் செதுக்கப்பட்டுள்ள இவ்விக்கிரகம், 2 அடி உயரத்தை உடையது.  ஒடுங்கிய இதன் இடை 5 அங்குல அகலத்தையும் இடுப்புக்கு கீழே உள்ள தொடைப் பகுதி ஒரு அடி அகலத்தையும் கொண்டுள்ளது. இதன் நான்கு திருக்கரங்களில் முழங்கையுடன் இணைந்த இடது  வலது மேற்கரங்கள் பாசமும், தாமரையும் தாங்கி நிற்க, வலது  இடது கீழ்க் கரங்கள் முறையே அபயகஸ்த்தத்தையும், வரதகஸ்த்தத்தையும் குறித்து நிற்கின்றன. 9 அங்குல உயரமுடைய இதன் திருமுடியின் மேற்பாகத்தில் உச்சிக் கொண்டையும் நெற்றிப்பட்டத்திற்கு மேல் இரத்தினாரமும் மகுடத்தின் முற்பக்கத்தில் குறுக்காகவும் நிலைக்குத்தாகவும் மூன்று குறியீடுகளும் காணப்படுகின்றன. இதன் காதில் மும்மூன்று மகர குண்டலமும் கழுத்தில் திரண்ட தாலி அமைப்பும் அதன் மேல் அகன்ற பதக்கமும் அணியப்பட்டுள்ளன.
 கல் விக்கிரகங்களுக்கு பொதுவாக உள்ள முப்புரிநூல் இவ்விக்கிரகத்தில் மிகத் தெளிவாகச் செதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக இவ்விக்கிரகத்தின் ஒடுங்கிய இடையும், அகன்ற மார்பகமும் உயர்ந்த மகுடமும் கழுத்தில் உள்ள அலங்காரத் தன்மை கொண்ட மார்பகங்களும் பழைமையான தெய்வ விக்கிரகம் என்பதற்குச் சான்று பகர்கின்றன. இவ்விக்கிரகத்தின் வலது  இடது மேல் கரங்கள் நிலத்திற்குள் இருந்து வெளியே எடுத்த போது உடைந்து விட்டதால் அவ்விக்கிரகம் வாரிவனநாதர் ஆலயத்திற்கு மேற்காக அதற்கென கட்டப்பட்ட மிகச் சிறிய மண்டபத்தினுள் வைக்கப்பட்டுள்ளது.
அவ்விக்கிரகம் கண்டெடுக்கப்பட்ட காணியில் அண்மையில் நாம் தொல்லியல் மேலாய்வில் ஈடுபட்டிருந்த வேளையில், அக்காணியில் புதிதாக பயிர்ச் செய்கையில் ஈடுபட்டோர் மண்ணுக்குள் மூடுண்டிருந்த செம்பினால் வார்க்கப்பட்ட நாக விக்கிரகம் ஒன்றை கண்டெடுத்தனர். இவ்விக்கிரகம் தற்கால ஆலயங்களில் வைத்து வழிபடப்படும் விக்கிரகங்களில் இருந்து பல வகையில் வேறுபடுகின்றது. பத்து அங்குல உயரத்தில் படமெடுத்த நிலையில் உள்ள இவ்விக்கிரகத்தின் உடற்பகுதி ஆறு வளையங்களாக சுருண்ட நிலையில் வார்க்கப்பட்டுள்ளது.  இதன் அகண்ட தலைப் பகுதியின் மேல் தாமரைத் தண்டொன்றும், அதன் மேல் ஆறு இதழ்கள் கொண்ட தாமரையும், அதற்குமேல் தெய்வ உருவம் நிற்பதற்குரிய வட்ட வடிவிலான பீடமும் அமைந்துள்ளது. மிகுந்த அழகும் பளபளப்புத் தன்மையும் கொண்ட இவ்விக்கிரகம் பிற்கால விக்கிரகங்களைப் போன்று உடலில் உட்பக்கம் வெறும் கோதாக இல்லாமல் உடல் உறுப்புக்கள் முழுவதும் தனிச் செம்பினால் வார்க்கப்பட்டுள்ளது. இவ்விடத்தில் முன்பு ஆலயம் ஒன்று இருந்திருக்கலாம் எனக் கருதக்கூடிய செங்கட்டிகளும் கட்டட சிதைவுகளும் காணப்படுகின்றன. இவ்விடம் இராசமாளிகை வளவு எனவும், இதற்கு அருகில் உள்ள காணி இராசவளவு எனவும், அருகில் உள்ள வீதி இராச வீதி எனவும் அழைக்கப்படுவது இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.
ஏனைய விக்கிரகங்களில் அம்மனும், சூரியனும் தற்போதைய சாவகச்சேரி நவீன சந்தைக்கு கிழக்காக உள்ள பழைய சந்தைப் பகுதியில் அத்திவாரம் வெட்டும் போது கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவற்றுள் அம்மன் விக்கிரகம் மிகுந்த கலையுணர்வும் தென்னிந்திய திராவிடக் கலை மரபுடன் கூடிய தொழில்நுட்பமும் கொண்டதாகும். தற்போது இலங்கையில் வழிபட்டுவரும் உயரம் கூடிய அம்மன் விக்கிரகங்களில் ஒன்றாக இதைக் கருத இடமுண்டு. கருங்கல்லில் முப்பரிமாண நிலையில் செதுக்கப்பட்டுள்ள இவ்விக்கிரகம் பீடமற்ற நிலையில் 4 அடி உயரத்தையும், பீடத்துடன் 5 லி  அடி உயரத்தையும் கொண்டுள்ளது. ஒரு அடி உயரமுடைய கேச மகுடம் மூன்று பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. மேல் பகுதியில் உச்சிக் கொண்டையும், நெற்றிப் பட்டத்திற்கு மேல் இரத்தினாரமும், மகுடத்தின் முற்பக்கத்தில் குறுக்காகவும் நிலைக்குத்தாகவும் மூன்று குறியீடுகள் காணப்படுகின்றன. நான்கு கைகளைக் கொண்ட இவ்விக்கிரகத்தின் வலது மேல் கரத்தில் வெண்டையமும், இடது மேல் கரத்தில் தாமரையும் காணப்படுகின்றது. முந்தைய இரு கரங்களில் வலது கரம் அபயகஸ்த்தத்தையும், இடது கரம் வரதகஸ்த்தத்தையும் குறித்து நிற்கின்றன. இதன் காதில் மகர குண்டலமும், கழுத்தில் ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டுள்ள பதக்கமும் காணப்படுகின்றன. இதன்  இடுப்பு 6 அங்குல அகலத்தையும், அதன் கீழுள்ள தொடைப் பகுதி 9 அங்குல அகலத்தையும் கொண்டுள்ளது.
இடுப்பிலுள்ள சிங்க முகப்புடைய மேகலை இடுப்பைச் சுற்றி தொங்கும் சங்கிலியால் இணைக்கப் பட்டிருப்பதையும், இதனுடன் இணைந்த நிலையில் உள்ள பீதாம்பரம் இரு கால்களுக்கிடையே கணுக்கால் வரையுள்ள கால் சலங்கை வரை நீண்டிருப்பதையும் தெளிவாகக் காணமுடிகின்றது. வலது கீழ் கரத்தின் முழங்கையுடன் வெளிப்படுத்தப்பட்ட முடிக்குஞ்சரமானது முற்பக்கத்தில் தெரியுமாறு இருப்பதும், இடது பக்க தோளின் மேலால் செல்லும் முப்புரிநூல் தெளிவாக செதுக்கப்பட்டிருப்பதும் இவ்விக்கிரகத்தில் காணக் கூடிய சிறப்பு மிக்க அம்சங்களாகும்.
 இவ்விக்கிரகத்துடன் சந்தைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மற்றைய விக்கிரகமான சூரியன் 2 1/2  அடி உயரமுடையது. நிற்கின்ற சமபங்க நிலையில் செதுக்கப்பட்டுள்ள இவ்விக்கிரகத்தின் மகுடம் 6 அங்குல உயரமுடையது. இம்மகுடத்தின் பின்னாலுள்ள ஒளிவட்டம் நீள்வட்ட வடிவில் அமைந்துள்ளது. 9 அங்குல உயரத்திலுள்ள சதுர வடிவிலான பீடத்தில் ஒழுங்கற்ற பகுதி மீது மீண்டும் வட்ட வடிவிலான தாமரை ஆசனத்தின் மீது  இவ்விக்கிரகம் அமைந்துள்ளது. அதன் இரு கரங்களிலும் தாமரை மலர் காணப்படுகின்றன. ஏனைய உடல் உறுப்புக்களும் ஆடை ஆபரணங்களும் சிதைவடைந்திருப்பதால் அவை பற்றி பூரணமாக கூறமுடியாது.
 இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள விக்கிரகங்களுள் ஆவுடையுடன் கூடிய விக்கிரகம் சிறப்பாக நோக்கத்தக்கது. இவ்விக்கிரகம் சந்தைக்கும் இராசமாளிகை வளவிற்கும் இடையிலுள்ள நீதிமன்ற வளவில் பழைய கிணறு மீண்டும் வெட்டப்பட்ட போது கண்டெடுக்கப்பட்டதாகும். இச்சிவலிங்கம் மாதோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பல்லவர் காலச் சிவலிங்கத்தைப் போன்று மிகப் பெரியதாகும். எட்டடி உயரமான இந்த லிங்கத்தின் 6 லுஅடி உயரமான பாகம் மண்ணினுள் மறைக்கப்பட்டு, 1 லி  அடி உயரமான பாகம் வெளியே தெரியுமாறும் வைக்கப்பட்டுள்ளது. கிணற்றிலிருந்து வெளியே எடுத்தபோது ஏற்பட்ட உடைவு காரணமாக லிங்கத்தின் மேல் பாகம் தற்போது ஒழுங்கற்றுக் காணப்படுகின்றது.  கருங்கல்லில் வட்ட வடிவில் செய்யப்பட்டுள்ள இதன் ஆவுடை 1 லு  அடி உயரத்தையும், பத்தடி சுற்றளவையும் கொண்டுள்ளது. இவ்வாவுடையின் அழகுத் தன்மையும், தோற்றமும் பிற்கால ஆவுடையின் அமைப்பிலிருந்து வேறுபட்டதாக காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட நான்கு விக்கிரகங்களும் குறிப்பிட்ட மிகச் சிறிய வட்டத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது சிறப்பாகக் குறிப்பிடத்தக்கது.

போர்த்துக்கேயரின் கலையழிவுக் கொள்கை
யாழ்ப்பாண அரசு காலத்தில் இந்து மதம் அரச ஆதரவு பெற்ற ஒரு மதமாக விளங்கியது. ஆயினும் யாழ்ப்பாண அரச காலத்திற்கு உரியது எனக் கருதக்கூடிய எந்த ஓர் ஆலயமும் இதுவரை முழுமையாகப் பாதுகாக்கப் படவில்லை. இதற்குப் போர்த்துக்கேயரும் அவர்கள் பின்வந்த ஒல்லாந்தரும் கடைப்பிடித்த இந்து மதத்திற்கு எதிரான கலையழிவுக் கொள்கை ஒரு முக்கிய காரணமாகும். போர்த்துக்கேய ஆசிரியரான கெய்றோஸ் பாதிரியார் தமது மத நடவடிக்கையின்போது, 'யாழ்ப்பாணத்தில் இருந்த சிறியதும் பெரியதுமான 500 இந்து ஆலயங்களை இடித்து அழித்ததாக' தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களில் இருந்து பெறப்பட்ட கற்களைக் கொண்டே இந்து ஆலயங்களுக்கு அருகில் புதிய கிறிஸ்தவ ஆலயங்கள் கட்டப்பட்டதாக தெரியவருகிறது.
பிற்காலத்தில் பிற தேவைகளுக்காக நிலங்கள் வெட்டப்பட்டபோது போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்ட ஆலயத்தின் சிதைவுகளும், விக்கிரகங்களும் கண்டுபிடிக்கப்பட்டமை வரலாற்று உண்மையாகும். போர்த்துக்கேயரின் கலையழிவுக் கொள்கையில் இருந்து இந்து விக்கிரகங்களைப் பாதுகாக்கும் பொருட்டு, மதப்பற்று கொண்ட மக்கள் கிணறுகள் அல்லது மறைவான இடங்கள் ஆகியவற்றில் அவ்விக்கிரகங்களைப் புதைத்து வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறான ஒரு கருத்து யாழ்ப்பாண அரசு தொடர்பாக எழுந்த யாழ்ப்பாண வைபவமாலையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாவகச்சேரியில் கிடைத்த நான்கு விக்கிரகங்களையும் நோக்கும்போது, அவை தற்செயலாகவா அல்லது பிற இடங்களில் இருந்து கொண்டுவந்து புதைக்கப்பட்டனவா என்று கூறமுடியாது. இந்த நான்கு விக்கிரகங்களும் ஏறத்தாழ 100 சதுர யார் பரப்பளவுக்குள் கண்டு எடுக்கப்பட்டவை ஆகும். இவ்வாறு கண்டு எடுக்கப்பட்ட இடத்தில் உள்ள கட்டடங்களின் சிதைவுகள் மற்றும் பிற தொல்பொருட் சான்றுகள் ஆகியவற்றை நோக்கும்போது, முன்பு அவ்விடத்தில் பெரிய ஓர் ஆலயம் இருந்தது என உறுதியாகக் கூறமுடியும்.
தற்போதுள்ள சாவகச்சேரி சந்தைப் பகுதியில் அண்மையில் பிற தேவைக்காக நிலம் வெட்டப்பட்டபோது, கட்டடத்திற்கு உரிய அத்திவாரமும் கட்டடத்தின் சிதைவுகளும் கண்டுபிடிக்கப்பட்டன. செங்கட்டிகளால் கட்டப்பட்ட அத்திவாரங்களை மிகத் தெளிவாக பார்க்க முடியும். அவ்வத்திவாரங்களிற்குத் தெற்கே தற்போதைய பஸ்தரிப்பு நிலையத்தில் ஒரு சிறிய கிணறு காணப்படுகின்றது. அக்கிணறு முன்னர் இருந்த  ஆலயத்தின் திருமஞ்சனக் கிணறு எனக் கூறப்படுகின்றது. அக்கிணற்றுக்குத் தெற்காக நீதிமன்ற வளவில் 3 அடி அகலம் உள்ள செங்கட்டிகளால் கட்டப்பட்ட கட்டடத்தின் சுவர்ப் பகுதி காணப்படுகின்றது. இச்சுவருடன் இணைந்த கட்டடத் தொகுதி ஒன்று பிரித்தானியர் ஆட்சியில் வரலாற்று நினைவுச் சின்னமாக சட்டரீதியாக பாதுகாக்கப்பட்டதற்கு ஆதாரங்கள் உண்டு. அண்மையில் தற்போதைய நீதிமன்றம் இருந்த இடத்தில் புதிய நீதிமன்றம் கட்டுவதற்காக அத்திவாரம் வெட்டியபோது, ஆலயத்திற்கு உரிய முருகைக் கற்கள், அத்திவாரத்திற்குப் பயன்படுத்திய செங்கற்கள் ஆகியன பரவலாக வெளிவந்துள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்னர் ஊகமாக கூறிய ஆலயம் ஐரோப்பியர் ஆட்சியில் கட்டப்பட்ட நீதிமன்றம் இருந்த இடத்தில் இருந்துள்ளதென்பதை அவை உறுதிப்படுத்தியுள்ளன.

ஆலயத்தின் காலம்
ஆலயத்தின் தோற்ற காலத்தை அறுதியாகக் காட்டும் சாசன ஆதாரங்கள் எவையும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் போர்த்துக்கேயர் மற்றும் ஒல்லாந்தர் ஆட்சியின் முற்பகுதியில், சுதேச மதங்களுக்கு சுதந்திரம் மறுக்கப்பட்டதால் அக்காலத்தில் அவ்வாலயம் கட்டப்பட்டிருக்க முடியாது. அவ்வாலயம் பிரித்தானியர் ஆட்சியில் கட்டப்பட்டிருந்தாலோ அல்லது ஏற்கனவே இருந்த ஆலயம் அழிக்கப்பட்டிருந்ததாலோ அது பற்றிய வரலாறு நிச்சயம் பாதுகாக்கப்பட்டிருக்கும். ஆகவே அவ்வாலயம் போர்த்துக்கேயர் காலத்திற்கு முந்தியது என்பதில் கருத்து வேறுபாட்டிற்கு இடமில்லை.
மேலும் ஓர் ஆலயத்தின் பழைமையைக் கணிப்பதில் அவ்வாலயத்தோடு தொடர்புடைய சிற்பங்கள், சிலைகள் என்பவற்றின் வடிவமைப்பு, கலைப்பாணி என்பனவற்றிற்கு முக்கிய இடமுண்டு. அவ்வகையில்  இவ்வாலயத்தோடு தொடர்புடையது எனக் கருதப்பட்ட விக்கிரகங்களின்  புகைப்படங்களை பார்வையிட்ட தென்னிந்தியக் கலை வரலாற்று ஆசிரியர்கள், அவற்றின் கலை மரபை அடிப்படையாகக் கொண்டு அவ்விக்கிரகங்களின் காலம் கி.பி. 11  13 ஆம் நூற்றாண்டுக்கு இடைப்பட்டது என அதாவது பிற்பட்ட சோழர் அல்லது முற்பட்ட பாண்டியர் காலத்திற்கு உரியது எனக் கணித்துள்ளனர். அதேகாலக் கணிப்பை பேராசிரியர் இரகுபதி அவர்களும் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் 16 ஆம் நூற்றாண்டில் எழுந்த தக்ஷணகைலாச புராணம் கூறும் வாரிவானேஸ்வரர் ஆலயத்தின் தோற்றம் கி.பி. 13 ஆம் நூற்றாண்டு என அதாவது யாழ்ப்பாண அரசுக்கு முந்திய காலம் எனக் கூறலாம்.
ஆகவே ஒரு பிரதேசத்தின் வரலாற்றுப் பெருமை அப்பிரதேச சமய விழுமியத்திலேயே தங்கியுள்ளது. வரலாற்றில் தென்மராட்சிப் பிரதேசம் இடம்பிடிப்பதற்கு அம்மக்கள் சமயப் பற்று, பாரம்பரியம், கலை, கலாசாரம், பண்பாட்டு, விழுமியங்கள் ஆகியவற்றை தொய்வின்றி பேணிவருவதே காரணமாக இருக்கலாம்.

No comments:

Post a Comment